ஆசிய தகுதிகாண் போட்டியில் ஹட்டன் வெலிஓயா புதுகாட்டைச் சேர்ந்த செல்வன்.கே.சண்முகேஸ்வரன் அசத்தலான வெற்றி.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22-02-2019) ஆரம்பமாகிய ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்த அவர், தனது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியைப் பதிவுசெய்தார்.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (22-02-2019) காலை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாயின.
போட்டியின் முதல் நாள் காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 30 நிமிடங்கள் மற்றும் 30.38 செக்கன்களில் நிறைவு செய்து 2019ஆம் ஆண்டில் தனது முதலாவாது வெற்றியைப் பதிவுசெய்தார்.
இலங்கையின் மெய்வல்லுனர் அரங்கில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள ஹட்டனைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், ஆண்களுக்கான நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் கடந்த வருடம் மாத்திரம் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருந்தார்.
அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் தங்கப் பதக்கம் வென்ற அவர், கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபற்றி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று தனது முதலாவது சர்வதேச வெற்றியையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், குறித்த போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான W வட்சன் (31 நிமி. 03.78 செக்.) இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப்படையின் பி. மதுரங்க (31 நிமி. 22.57 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
No comments: