சென்னை: மாதவரம் காவல்நிலையத்தில் நடிகர் தாடி பாலாஜி யிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி (45). இவர், சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் 2வது தெருவில் வசிக்கிறார். இவரது மனைவி நித்யா (32). இவர்களுக்கு கவுசிகா என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில், சிலர் அழைத்து பேசி சமாதானப்படுத்தியதால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால், இதன்பிறகு சில மாதங்களிலேயே அவர்களிடையே பிரச்னை ஏற்பட்டு தாடி பாலாஜி பிரிந்து சென்றுவிட்டார்.இதுபற்றி கடந்த 19ம்தேதி மாதவரம் போலீசில் நித்யா புகார் செய்தார். அதில், ‘என் கணவன் தாடி பாலாஜி ரவுடிகளை வைத்து என்னை மிரட்டுகிறார். வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். இதன்படி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாதவரம் காவல்நிலையத்துக்கு நேற்று பகல் 11.30 மணி அளவில் நடிகர் தாடி பாலாஜி விசாரணைக்கு வந்தார். போலீஸ் விசாரணையில், ‘நான் அடியாட்களை வைத்து மிரட்டியதாகவும் அடித்ததாகவும் எனது மனைவி நித்யா பொய்யான புகார் கொடுத்துள்ளார். அவர் கூறுகின்ற தினத்தில் நான் ஊரிலேயே இல்லை. என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எங்களது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் முடிவு எப்படி இருந்தாலும் அதை நான் சந்திப்பேன்’ என கூறியுள்ளார்.- Source: dinakaran
No comments: